இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் வீரமரணமடைந்தார்.
மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.
1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். [2] 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் போர்க் கடமைகளுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகள் மொறிஸிடம் கையளிக்கப்பட்டது.
ஆற்றிய முக்கிய பணிகள்
- 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் கண்விழித்துக் காவலில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
- அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சி பெற்று முதற் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று வெற்றி கண்டதுடன் நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
- 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.
- 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அப்பிரதேச மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதுவும் சிங்கள இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் கொடுமைகளிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதும் இவரின் முக்கிய பணியாக அமைந்தது.
- அதே சமயம் போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.
- 1988 இல் மொறிஸ் வடமராட்சி மக்களின் அன்பிற்கும் பெருநம்பிக்கைக்கும் ஆளாகியதுடன் 1987 இல் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை நிகழ்த்தி பெரு வெற்றி கண்டிருந்தார்.
- இக் காலகட்டம் மக்களுக்கும், போராளிகளுக்கும் பெரும் சோதனையான காலம் என்பதால் அநேக போராளிகளின் வாழ்வு காடுகளுக்குள் நகர்ந்தது. ஆனால் அந்த இக்கட்டான நிலையிலும் பிரதேசப் பொறுப்பாளர்கள் அந்தந்த ஊர்களிலேயே இருந்து பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அது அவர்களுக்கு மிகக் கடுமையான காலமாகவே அமையப் பெற்றிருந்தது. உணவும், உறையுளும் அற்ற கொடுமையான வாழ்வை மொறிஸ் உம் அணுவணுவாய் அனுபவித்தார்.
1989, மே 1ம் நாள், மந்திகையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், பருத்தித்துறை துறைமுகத்தடியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், மற்றும் வியாபாரிமூலையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம் - இம் மூன்று இராணுவமும் எட்டப்பர் கூட்டத்தினரின் உதவியுடன் மும்முனைச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு மொறிஸைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் தந்திரமான தாக்குதலை நிகழ்த்திய வேளை மொறிஸ் தனித்து நின்று போராடி... இராணுவ உயர்அதிகாரிகள் மூவரைச் சுட்டு வீழ்த்தி விட்டு ஈற்றில் பசூக்கா ஷெல்லின் தாக்குதலில் எரிகாயங்களுக்கு உள்ளாகி, அதே வேளை சயனைட்டும் அருந்தி வீரமரணம் அடைந்தார்.